Mar 4, 2014

கற்பியல் - 1151·  அதிகாரம்                      : 116 -பிரிவு ஆற்றாமை
·  இயல்                              : கற்பியல்
·  பால்                                : காமத்துப்பால்
·  குறள்                               : 1151

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
.
 
சொல் விளக்கம்:
வல்வரவு  - விடைபெறுதல்
மற்று – இல்லையெனில்

பொருள்:
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

விளக்கம்:
பிரிவு என்பது அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை.பெற்றோர் பிள்ளைகளைப் பிரிகிறார்கள்.நட்பில் கூட பிரிவு வருகிறது.இவை இரண்டைக்காட்டிலும் மிகுந்த துயர் சேர்க்கும் பிரிவு ஒன்று உண்டு.அது காதலர்கள் பிரிவு.சங்க காலம் முதலே பொருள் தேடி ஆடவர்கள் சொந்த ஊர் விட்டு தூர நகரங்கள் செல்வதுண்டு.

அப்படியாக, நம் தலைவன் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல ஆயத்தமாகிறான்.எவ்வளவு காலம் கழித்து திரும்புவான் என்ற தகவலும் இல்லை.இந்தச் செய்தியை தலைவியிடம் சொல்ல அவன் விரைகிறான்.ஆனால் தோழி வழியாக,இந்தச் செய்தியை முன்பே அறிந்திருந்த தலைவி தலைவனை வாய்பேச விடவில்லை.
"என்னைப் பிரியப் போகிறேன் என்ற வார்த்தையைச் சொல்லத்தானா இங்கு வந்தீர்? உங்களைப் பிரிந்தால் எங்கணம் நான் வாழ்வேன்?இப்போது கூறுங்கள்,என்னைப் பிரிந்து சொல்ல மாட்டேன் என்று! அது ஒன்றே எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.இல்லை, போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீங்கள் திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்ளுங்கள்!” என்று அழுதுகொண்டே உரைக்கிறாள்.தலைவன் உறைந்துபோய் நிற்கிறான்.

பொருள் தேடி வந்தால் தான் பிழைக்க முடியும் என்ற ஆறுதல்வார்த்தைகளைக் கேட்கவும் தலைவி தயாராக இல்லை.அவன் பெற்றோர்,உறவினர் மற்றும் நண்பர்களால் கூட அவனது பிரிவை நினையாமல் வாழ முடியும்.தலைவியால் அது இயலாது என்றும் அப்படி பிரிந்து சென்றால், அத்துயரால் அவள் இறந்துவிடக்கூடும் என்றும் இரண்டு வரிகளில் வள்ளுவர் அழகாக சொல்லியிருக்கிறார்.

Mar 6, 2013

அரசியல் -0423


அதிகாரம்          : அறிவுடைமை
இயல்             : அரசியல்
  பால்              : பொருட்பால்
குறள்              : 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

சொல் விளக்கம்:
பொருள் - சொல்/அறிவுரை/பொருள்பட உரைப்பவை.
 
பொருள்:
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பாமல்,அதேசமயம் ஒதுக்காமல்  உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்

விளக்கம்:
சில நேரங்களில் எனக்குள் ஒரு சந்தேகம் வருவதுண்டு.ஒரு சொல்லின் மதிப்பு என்பது எங்கிருந்து வருகிறது.சொல்பவர்களிடமிருந்தா அல்லது அதன் பொருளில் இருந்தா என்று.இந்தக் குறள் அதற்கான விடையை எனக்குக் கொடுத்தது.எவர் சொன்னால் என்ன? அதில் உண்மைப் பொருள் இருக்கிறது என நீ உணர்ந்தால்,அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள் என்கிறார் வள்ளுவர்.

பின்வரும் கதை இதற்கு சிறந்த உதாரணம்.

ஒரு குதிரை வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.

குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.
‘‘தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?’’ என்று கேட்டான்.
‘‘வருமே...’’ என்றான் சிறுவன்.

‘‘போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?’’

‘‘மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்’’ என்றான்.

சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு குதிரை வண்டிக்காரனுக்குக் கோபம்.‘‘என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?’’ என்று கேட்டான்.

‘‘போய்த்தான் பாருங்களேன்’’ என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான்.

சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது.
வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது.


Feb 15, 2013

அமைச்சியல் - 0667

·  அதிகாரம்                      : 67 - வினைத்திட்பம்
·  இயல்                              : அமைச்சியல்
·  பால்                                : பொருட்பால்
·  குறள்                             : 0667

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து
.

சொல் விளக்கம்:
உருவு – உருவம்
எள்ளாமை - ஏளனம் செய்யாமை/எள்ளி நகையாடாமல் இருத்தல்

பொருள்:
உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிப் போன்றவர்கள் உலகத்தில் உள்ளனர், அவர்களுடைய உருவின் சிறுமையைக்கண்டு இகழக் கூடாது.

விளக்கம்:
ஒரு ஊரில் மிகப்பெரிய ஒரு தொழிற்சாலை இருந்தது.ஏராளமான மின்சாதனங்கள் அங்கே இயங்கிக்கொண்டு இருந்தன.ஒருநாள் திடீரென ஒரு இயந்திரம் வேலை செய்யவில்லை.அந்த இயந்திரத்தின் விலை 10 கோடி ரூபாய்.இதனைக் கேள்விப்பட்டு தலைமைப் பொறியாளர் அங்கு வந்தார்.எவ்வளவோ முயற்சித்தும் என்ன கோளாறு என்பதை ஊகிக்கமுடியவில்லை.
பிறகு அங்கு பல ஆண்டுகள் பணியாற்றி வரும் ஒரு ஊழியரை அழைத்து, இதற்கு முன் இந்த இயந்திரப் பழு பார்த்தவர் யார்? என்று கேட்டார்.அவர் பெயர் ராமசாமி.இதே ஊர்.அனுபவசாலி.அவர் நிச்சயம் இதை சரி செய்வார் என அந்த ஊழியர் பதிலளித்தார்.
அவர் சொன்ன முகவரிக்குச் சென்று, அங்கே இருந்த ராமசாமியைப் பார்த்தார் பொறியாளர்.ராமசாமி நல்ல கருப்பு,ஒல்லி தேகம்,அதிகம் படித்தவரில்லை என்பதைப் பார்த்தாலே ஊகிக்க நம்மால் முடியும்.அவரும் வர சம்மதித்தார்.ஒரு சுத்தியலை எடுத்து இயந்திரத்தின் மேல் இருந்த ஆணியை ஒரு தட்டு தட்டினார்.என்ன ஆச்சரியம் அந்த இயந்திரம் நன்றாக வேலை செய்தது.இதற்கு சன்மானமாக 5 லட்சம் ரூபாயை ராமசாமி கேட்க, இயந்திரத்தின் மதிப்பு கருதி அதைக் கொடுக்கவேண்டியதாயிற்று.அவரின் உருவத்தைக் கண்டு குறைத்து மதிப்பிட்டோம் என பொறியாளருக்கு பின் உறைத்தது.

உருவம் என்பது பாத்திரம் போல.பல வகைகளாய் பல அளவுகளில் அது இருக்கும்.ஆனால் திறமை,நல்ல குணம்,அறிவாற்றல் போன்றவை அதில் ஊற்றி வைக்கப் பட்டிருக்கும் அமிழ்தம் போன்றவை.ஆக, பாத்திரத்தை பெரிதாய் நினைத்து அமிழ்தினை இழந்து விடாதே என்ற அற்புதக் கருத்து இந்தக் குறளுக்குள் ஒளிந்துள்ளது.