Jan 9, 2012

படையியல் -0261


  • அதிகாரம் : படைச் செருக்கு
  • இயல்     : படையியல்
  • பால்      : பொருட்பால்
  • குறள்     : 772

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

சொல் விளக்கம்:
கான முயல் - காட்டில் வாழும் முயல்
ஏந்தல் - எய்துவதற்காக கையில் வைத்திருத்தல்
பொருள்:
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.
விளக்கம்:
இந்த புவியில் வாழும் ஒவ்வொரு உயிரும் தனக்கே உரித்தான பாணியில் உயிர்வாழ்கின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால இதில் மனிதன்,விலங்கு என்ற பாகுபாடு அவ்வளவாக இல்லை.
நாமும் வாழ்கின்றோம்.விலங்குகளும் வாழ்கின்றன.உணவு இருப்பிடம்,துணை தேடல்,சந்ததி பெருக்கம்
என் பல செயல்பாடுகள் அனைவருக்கும் பொதுவானது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இந்த வாழ்க்கைப் போராட்டத்தில்,நாம் பிழைத்து வாழவேண்டும் எனில், நமக்கென ஒரு இடத்தைத்
தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.நாம் நமது இலக்கை எப்படி நிர்ணயிக்கின்றோம் என்பதுதான்
நமது இடத்தின் நிலைப்பாட்டிற்கு அடிப்படை.
நம் வாழ்க்கை முழுக்க இருமைகள் நிறைய இருக்கின்றன.இன்பம்-துன்பம்,இருள்-வெளிச்சம்,பிறப்பு-இறப்பு என இன்னும் பல.
ஆக,இதுபோன்ற இருமைகளில் ஏதாவது ஒன்றை நாம் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் யோசித்து பின்னர் தேர்ந்தெடுக்கின்றோம்.
வெற்றி,தோல்விகள் என்பது நமது செயல்பாட்டில் தான் இருக்கிறது.ஆகையால்,நமது இலக்கு என்றும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
இது தான் இந்தக் குறள் நமக்கு கூறும் கருத்து.
வேட்டை என வந்தாகிவிட்டது,ஏன் சிறு முயல்களுக்காக நேரத்தை வீணடிக்கிறாய்?யானைக்கு குறிபார்! தோற்றால்
பரவாயில்லை.வேல் நம் கையில்.யானைகளுக்கும் பஞ்சம் இல்லை.
வாழ வந்துவிட்டோம்! இலக்குகளை பெரிதாக வை.அதை நோக்கிப் போராடு! உறுதி நமக்கு இருக்கிறது.
வாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.இதனை மனதில் வைத்து சிறப்பாக, பெரிய இலக்குகளை நோக்கி வாழ வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment