Dec 19, 2011

வான்சிறப்பு - 0017


  • அதிகாரம்                           : 02- வான்சிறப்பு
  • இயல்                                  : பாயிரவியல்
  • பால்                                     : அறத்துப்பால்
  • குறள்                                   : 0017

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

சொல் விளக்கம்:
தடிந்தெழிலி - மிக கருமையான மேகம்
நல்காதாகி - தராமல் போனால்
பொருள்:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
விளக்கம்:
இந்தக் குறளில், கவிஞர் அருமையான உவமையை மறைபொருளாகக் கூறியிருக்கிறார்.
குறள் கூறும் நேரடி செய்தி யாதெனில், “கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மேகத்திரளாகிறது.அந்தக் கரிய மேகங்கள் தாம் உட்கொண்ட நீரை, மீண்டும் மழையாகப் பொழியாமல் போனால்,
அந்தக் கடலுக்கு நீர் ஆதாரம் இல்லை.அது அளவில் மிகப்பெரியது என்றாலும், வற்றிப் போகும்! " என்பதாகும்.

அதுபோல, மனிதனாகப் பிறந்த நாம், நம் வாழ்வில் சிலருக்கு கடன்பட்டவர் ஆகின்றோம்.நம் சமூகம்,நம்மை தாலாட்டி வளத்த பெற்றோர்,கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் என்ற
அத்தனை பேரின் முயற்சியால் தான் நாம் மேகம் போல உயர்ந்து இருக்கின்றோம்.ஒரு உயர்ந்த நிலையை அடைந்த பிறகு, மேற்கூறிய அனைவருக்கும் பயன்தருமாறு வாழ வேண்டும்.

அதை விடுத்து, நமது சுய வாழ்வே பெரிது என்று நினைத்தால் அது மேகம் மழை பொழியாமல் இருப்பதற்கு சமமாகும்.
நம்மை சார்ந்த கடல் போன்ற அத்தனை பேரும் கைவிடப்பட்டவராவர்.அவர்களது தாழ்வுக்கு நாமே காரணாமாகக் கூடும்.
ஆக, எவ்வளவு உயரம் போனாலும், உதவியவருக்கு நன்றி செய்ய மறக்கக் கூடாது.

நம் இந்தியா இன்னும் வளரும் நாடாகவே இருப்பதற்கும், முந்தைய காலத்தில் கலாச்சார புகழோடு வளர்ந்து உயர்ந்த நாடாக இருந்ததற்கும் இதுவே காரணமாகும்! நாம் முக்கியம். அதைவிட நாடு முக்கியம்!

No comments:

Post a Comment