Dec 14, 2011

வலைப்பக்கம்-அறிமுகம்

“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”


திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

நூற் பிரிவுகள்

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

திருக்குறள் மீது எனக்கு இருக்கும் அளவுகடந்த ஈடுபாடு காரணமாக இந்த வலைப்பக்கத்தை துவங்கி இருக்கிறேன்.
ஒவ்வொரு குறளையும் எளிய விளக்கம் மற்றும் கதைகளுடன், அன்றாட வாழ்வியல் முறைகளுக்கு
ஏற்றாற்போல கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்!

No comments:

Post a Comment