Dec 19, 2011

வான்சிறப்பு - 0017


  • அதிகாரம்                           : 02- வான்சிறப்பு
  • இயல்                                  : பாயிரவியல்
  • பால்                                     : அறத்துப்பால்
  • குறள்                                   : 0017

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

சொல் விளக்கம்:
தடிந்தெழிலி - மிக கருமையான மேகம்
நல்காதாகி - தராமல் போனால்
பொருள்:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
விளக்கம்:
இந்தக் குறளில், கவிஞர் அருமையான உவமையை மறைபொருளாகக் கூறியிருக்கிறார்.
குறள் கூறும் நேரடி செய்தி யாதெனில், “கடல் நீர் ஆவியாகி மேலே சென்று மேகத்திரளாகிறது.அந்தக் கரிய மேகங்கள் தாம் உட்கொண்ட நீரை, மீண்டும் மழையாகப் பொழியாமல் போனால்,
அந்தக் கடலுக்கு நீர் ஆதாரம் இல்லை.அது அளவில் மிகப்பெரியது என்றாலும், வற்றிப் போகும்! " என்பதாகும்.

அதுபோல, மனிதனாகப் பிறந்த நாம், நம் வாழ்வில் சிலருக்கு கடன்பட்டவர் ஆகின்றோம்.நம் சமூகம்,நம்மை தாலாட்டி வளத்த பெற்றோர்,கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் என்ற
அத்தனை பேரின் முயற்சியால் தான் நாம் மேகம் போல உயர்ந்து இருக்கின்றோம்.ஒரு உயர்ந்த நிலையை அடைந்த பிறகு, மேற்கூறிய அனைவருக்கும் பயன்தருமாறு வாழ வேண்டும்.

அதை விடுத்து, நமது சுய வாழ்வே பெரிது என்று நினைத்தால் அது மேகம் மழை பொழியாமல் இருப்பதற்கு சமமாகும்.
நம்மை சார்ந்த கடல் போன்ற அத்தனை பேரும் கைவிடப்பட்டவராவர்.அவர்களது தாழ்வுக்கு நாமே காரணாமாகக் கூடும்.
ஆக, எவ்வளவு உயரம் போனாலும், உதவியவருக்கு நன்றி செய்ய மறக்கக் கூடாது.

நம் இந்தியா இன்னும் வளரும் நாடாகவே இருப்பதற்கும், முந்தைய காலத்தில் கலாச்சார புகழோடு வளர்ந்து உயர்ந்த நாடாக இருந்ததற்கும் இதுவே காரணமாகும்! நாம் முக்கியம். அதைவிட நாடு முக்கியம்!

Dec 15, 2011

ஒப்புரவறிதல்-0261


    • அதிகாரம்            : ஒப்புரவறிதல்
    • இயல்                     : இல்லறவியல்
    • பால்                        : அறத்துப்பால்
    • குறள்                      : 261

    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்

    சொல் விளக்கம்:
    பயன்மரம்  - பயனுள்ள மரம்
    நயனுடையான் - நல்ல பண்புகள் கொண்டவன்

    பொருள்:
    ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்

    விளக்கம்:
    ஊரின் நடுவே ஒரு பெரிய மரம் இருக்கிறது.அதை நட்டு வைத்தவர் யாரென்று தெரியாது.
    அதை பரமாரிக்க யாரும் இல்லை என்றாலும் மரமானது,ஊர் முழுவதுமே தன்னிடம் வந்தாலும்
    நிழல் தரும் அளவுக்கு கிளைகளை வியாபித்திருந்தது.அது ஒரு மாமரம்.
    மக்களுக்கு நிழல் மட்டுமல்லாது காய்,கனிகளையும் கொடுத்தது அந்த மரம்.
    அதனால் அந்தா ஊர் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
    இதனைக்கண்டு அந்த மரமும் களிப்போடு செழித்து நின்றது.

    பிறருக்கு கொடுத்து உதவும் எண்ணம் கொண்டவன் இந்த பயன் மரத்திற்கு ஒப்பாவான்.
    அவனைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அவனது செல்வம் பயன்படும்.

    Dec 14, 2011

    தெரிந்து செயல்வகை - 0461

    • அதிகாரம்                     : தெரிந்து செயல்வகை
    • இயல்                                : அரசியல்
    • பால்                                   : பொருட்பால்
    • குறள்                                 : 461
    அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமும் சூழ்ந்து செயல்


    சொல் விளக்கம்:
    அழிவதூஉம் - இழப்புகளையும்
    ஆவதூஉம் - விளைவுகளையும்
    வழிபயக்கும் - பின்பு உண்டாகும்
    ஊதியமும் - இலாபத்தையும்
    சூழ்ந்து செயல்- ஆராய்ந்து செய்

    பொருள்:
    மு.வ உரை :
    (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

    விளக்கம்:
    அன்றாட வாழ்வில் நாம் பல செயல்களை செய்கின்றோம்.
    காலையில் எழுந்து குளிப்பது,உண்பது எனத் துவங்கி நாள் முழுக்க ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருக்கின்றோம்.
    ஆக, செயல்(Action) என்பது மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று.

    ஒரு சில முக்கிய முடிவுகள்(plan) செயல்முறையின் குறைபாட்டால் பாதியில் தடைபடுவதும் உண்டு.
    என்வே, ஒரு செயலைத் துவங்கும் முன்னர்,செயல் வெற்றியடைந்தால் உண்டாகும் இலாபம்,தோல்வியில் முடிந்தால் நமக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும் அந்த
    இழப்புகள் நமது வாழ்க்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் என அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
    முடிவுகளைச் சீர்தூக்கிப் பார்த்த பின்னரே செயலைத் துவங்க வேண்டும்.

    வலைப்பக்கம்-அறிமுகம்

    “இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,
    மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,
    மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”


    திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

    நூற் பிரிவுகள்

    திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது.

    திருக்குறள் மீது எனக்கு இருக்கும் அளவுகடந்த ஈடுபாடு காரணமாக இந்த வலைப்பக்கத்தை துவங்கி இருக்கிறேன்.
    ஒவ்வொரு குறளையும் எளிய விளக்கம் மற்றும் கதைகளுடன், அன்றாட வாழ்வியல் முறைகளுக்கு
    ஏற்றாற்போல கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்!