Dec 17, 2012

களவியல் -1116



·  அதிகாரம்                      : 112-நலம் புனைந்து உரைத்தல்
·  இயல்                              : களவியல்
·  பால்                                : காமத்துப்பால்
·  குறள்                               : 1116

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
 
சொல் விளக்கம்:
மதி - திங்கள்/நிலவு
அறியா பதியின் – அறியாததாகையால்
பொருள்:
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.
விளக்கம்:
நலம் புனைந்து உரைத்தல் என்ற இந்த அதிகாரம் முழுவதுமே, தன் தலைவியை உச்சகட்டமாக வர்ணிக்கிறார் புலவர்.அவளது இடையின் எளிமை ,அவள் பாதத்தின் மென்மை என ஒவ்வொன்றாய் விவரிக்கிறார்.

இந்தக்குறளில், தலைவியின் முகத்தை, நிலவுடன் ஒப்பிடுகிறார்.பிற்காலக் கவிஞர்களில் பலர்  இதே உவமையை எடுத்தாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.வள்ளுவரே அவர்கட்கு முன்னோடி.

சிறுவயதில் ஒருவர் நம்முடன் பள்ளியில் படித்திருக்கிறார்.ஏதோ காரணங்களால் அவர் வேறு இடம் சென்றுவிட்டார் என வைத்துக்கொள்வோம்.பல ஆண்டுகள் கழித்து அவர் முகத்தை திரும்பவும் நாம் பார்க்க நேரிடும்போது,சட்டென நினைவுக்கு வந்துவிடும்.நமக்கே இப்படி என்றால்,விண்மீண்களையும்,நிலவையும் நினைத்துப்பாருங்கள்.நிலவை, பல கோடி ஆண்டுகளாய் அருகில் நிறுத்தி பார்த்திருப்பவை விண்மீண்கள் மட்டுமே.

எக்காரணங்கொண்டும் மறதி என்பது, குழப்பம் என்பது அங்கே நிலைபெற வாய்ப்பே இல்லை.ஆனால், விண்மீண்கள் அன்றெனப் பார்த்து, தலைவியின் ஒளி பொருந்திய முகத்தைக் கண்டுவிட்டன.நின்ற நிலையிலேயே குழம்பிக் கிடந்தன.நிலவு எப்படி பூமிக்கு இறங்கிப் போனது என்று விவாதித்துக்கொண்டன.உண்மையான திங்கள் அருகில் இருந்தபோதும்,தலைவியின் முகத்தின் பேரொளியைக்கண்டு கலங்கித் தவித்தன விண்மீன்கள்.

கற்பனையின் உச்சமல்லவா இது.அருகிலே இருக்கும் தன் காதலியின் முக ஒளியில் மயங்கிக்கிடக்கும் காதலன்,தன் நிலையில் விண்மீண்களை நிறுத்திப் பார்ப்பதுபோல் அமைந்த குறள் இது.அருமையான சிந்தனை.

May 24, 2012

களவியல் -1120


·  அதிகாரம்   : 112-நலம் புனைந்து உரைத்தல்
·  இயல்      : களவியல்
·  பால்          : காமத்துப்பால்
·  குறள்                : 1120

அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

சொல் விளக்கம்:
அனிச்சம் - ஒரு வகை மலர்
தூவி இறகு
பொருள்:
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
விளக்கம்:
தனது காதலியின் இனமான பெண்ணினத்தையே பெருமைப்படுத்த நினைக்கிறார் வள்ளுவர்.
பொதுவாக பெண்மை என்றாலே மென்மை என்று அனைவரும் அறிவோம். அதனால் தான் 'அம்மா' என்ற வார்த்தை
மெல்லின 'ம்,மா' எழுத்துகளால் வழங்கப்படுகிறது.

வள்ளுவர் இந்த மெல்லினப் பண்பை, பொதுவாக சொல்லிவைக்காமல் எடுத்துக்காட்டு கொண்டு விளக்குகிறார்.
தன் காதலியின் பாதங்களைப்பார்க்கிறார்.மெல்லிய பாதங்களைப்பார்த்து வியக்கிறார்.அவர் மனதில் கற்பனை உருவெடுக்கிறது.
உவமைக்கு உதாரணம் தேடுகிறார்.மலரின் இதழும்,பறவை இறகும் நினவுக்கு வருகிறது.

இரண்டு உதாரணங்களுக்கும், உயர்வான பெயர்களை ஆராய்ந்து பிறகு ஒரு முடிவுக்கு வருகிறார்.அனிச்சை அல்லது அனிச்சம்மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு மலர் இனம்.முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது.
அது போல, பறவை இறகுகளில் அன்னத்தின் இறகு மிகவும் மென்மையான ஒன்று.
உதாரணம் கிடைத்து விட்டது. அவற்றை ஓரம்கட்டி தன் காதலியின் பாதங்களை உயர்வுபடுத்த திட்டமிடுகிறார்.அதனை இருவரிகளில் அழகாக தொடுக்கிறார்.

"என் அன்பே! உன் பாதங்களை பிற கவிஞர்கள் சொல்வது போல் மலரினும் மெல்லியது என சொல்வதை விட,உயர்வாக கூற விழைகிறேன்.
மலரிலே மிக மென்மையானதுமான, முகர்ந்தால் கூட வாடிவிடுவதுமான அனிச்சமும்,மெல்லிய அன்னத்தின் இறகுகளும் கூட உன் பாதத்திற்கு நெருஞ்சி முள் போல வலியைத் தரக்கூடியது. மிதித்த சுவடுகள் அந்த மலர் போல், இறகைப்போல் உன் பாதத்தில் இளஞ்சிவப்பாய் பதிந்துள்ளதைப் பார்த்து வியக்கிறேன்!" என் பொருள்பட முடிக்கிறார்.

Jan 9, 2012

படையியல் -0261


  • அதிகாரம் : படைச் செருக்கு
  • இயல்     : படையியல்
  • பால்      : பொருட்பால்
  • குறள்     : 772

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

சொல் விளக்கம்:
கான முயல் - காட்டில் வாழும் முயல்
ஏந்தல் - எய்துவதற்காக கையில் வைத்திருத்தல்
பொருள்:
காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.
விளக்கம்:
இந்த புவியில் வாழும் ஒவ்வொரு உயிரும் தனக்கே உரித்தான பாணியில் உயிர்வாழ்கின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால இதில் மனிதன்,விலங்கு என்ற பாகுபாடு அவ்வளவாக இல்லை.
நாமும் வாழ்கின்றோம்.விலங்குகளும் வாழ்கின்றன.உணவு இருப்பிடம்,துணை தேடல்,சந்ததி பெருக்கம்
என் பல செயல்பாடுகள் அனைவருக்கும் பொதுவானது என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இந்த வாழ்க்கைப் போராட்டத்தில்,நாம் பிழைத்து வாழவேண்டும் எனில், நமக்கென ஒரு இடத்தைத்
தக்கவைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.நாம் நமது இலக்கை எப்படி நிர்ணயிக்கின்றோம் என்பதுதான்
நமது இடத்தின் நிலைப்பாட்டிற்கு அடிப்படை.
நம் வாழ்க்கை முழுக்க இருமைகள் நிறைய இருக்கின்றன.இன்பம்-துன்பம்,இருள்-வெளிச்சம்,பிறப்பு-இறப்பு என இன்னும் பல.
ஆக,இதுபோன்ற இருமைகளில் ஏதாவது ஒன்றை நாம் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் யோசித்து பின்னர் தேர்ந்தெடுக்கின்றோம்.
வெற்றி,தோல்விகள் என்பது நமது செயல்பாட்டில் தான் இருக்கிறது.ஆகையால்,நமது இலக்கு என்றும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
இது தான் இந்தக் குறள் நமக்கு கூறும் கருத்து.
வேட்டை என வந்தாகிவிட்டது,ஏன் சிறு முயல்களுக்காக நேரத்தை வீணடிக்கிறாய்?யானைக்கு குறிபார்! தோற்றால்
பரவாயில்லை.வேல் நம் கையில்.யானைகளுக்கும் பஞ்சம் இல்லை.
வாழ வந்துவிட்டோம்! இலக்குகளை பெரிதாக வை.அதை நோக்கிப் போராடு! உறுதி நமக்கு இருக்கிறது.
வாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.இதனை மனதில் வைத்து சிறப்பாக, பெரிய இலக்குகளை நோக்கி வாழ வாழ்த்துகிறேன்.