Mar 4, 2014

கற்பியல் - 1151



·  அதிகாரம்                      : 116 -பிரிவு ஆற்றாமை
·  இயல்                              : கற்பியல்
·  பால்                                : காமத்துப்பால்
·  குறள்                               : 1151

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
.
 
சொல் விளக்கம்:
வல்வரவு  - விடைபெறுதல்
மற்று – இல்லையெனில்

பொருள்:
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.

விளக்கம்:
பிரிவு என்பது அனைவருக்கும் ஒன்றாக இருப்பதில்லை.பெற்றோர் பிள்ளைகளைப் பிரிகிறார்கள்.நட்பில் கூட பிரிவு வருகிறது.இவை இரண்டைக்காட்டிலும் மிகுந்த துயர் சேர்க்கும் பிரிவு ஒன்று உண்டு.அது காதலர்கள் பிரிவு.சங்க காலம் முதலே பொருள் தேடி ஆடவர்கள் சொந்த ஊர் விட்டு தூர நகரங்கள் செல்வதுண்டு.

அப்படியாக, நம் தலைவன் பணி நிமித்தமாக வெளியூர் செல்ல ஆயத்தமாகிறான்.எவ்வளவு காலம் கழித்து திரும்புவான் என்ற தகவலும் இல்லை.இந்தச் செய்தியை தலைவியிடம் சொல்ல அவன் விரைகிறான்.ஆனால் தோழி வழியாக,இந்தச் செய்தியை முன்பே அறிந்திருந்த தலைவி தலைவனை வாய்பேச விடவில்லை.
"என்னைப் பிரியப் போகிறேன் என்ற வார்த்தையைச் சொல்லத்தானா இங்கு வந்தீர்? உங்களைப் பிரிந்தால் எங்கணம் நான் வாழ்வேன்?இப்போது கூறுங்கள்,என்னைப் பிரிந்து சொல்ல மாட்டேன் என்று! அது ஒன்றே எனக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.இல்லை, போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீங்கள் திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக் கொள்ளுங்கள்!” என்று அழுதுகொண்டே உரைக்கிறாள்.தலைவன் உறைந்துபோய் நிற்கிறான்.

பொருள் தேடி வந்தால் தான் பிழைக்க முடியும் என்ற ஆறுதல்வார்த்தைகளைக் கேட்கவும் தலைவி தயாராக இல்லை.அவன் பெற்றோர்,உறவினர் மற்றும் நண்பர்களால் கூட அவனது பிரிவை நினையாமல் வாழ முடியும்.தலைவியால் அது இயலாது என்றும் அப்படி பிரிந்து சென்றால், அத்துயரால் அவள் இறந்துவிடக்கூடும் என்றும் இரண்டு வரிகளில் வள்ளுவர் அழகாக சொல்லியிருக்கிறார்.